சார்லி சாப்ளின் - புத்தக மதிப்புரை

13 Sep 2010
Posted by ச. செந்தில் குமரன்

Charlie chaplin book coverசிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது வார விடுமுறைகளில் சனிக்கிழமைகளை விட ஞாயிறுகள் புத்துணர்வை ஏற்படுத்தும், ஏனெனில் அன்று தான் தொலைக்காட்சியின் முன் தவமிருக்க உகந்த நாள். இதற்கு பல காரணங்கள் இருப்பினும், காலையில் அரை மணி நேரம் டி. டி சேனலில் ஒளிபரப்பப்படும் சார்லி சாப்ளின் படங்கள் மிகவும் மகிழ்ச்சி தருபவை. இந்த அப்பாவி மனிதன் செய்யும் பல கோணங்கி சேஷ்டைகளைக் கண்டு, கண்ணில் நீர் வர சிரித்து மகிழ்ந்த நாட்களை மறக்க முடியாது. இந்த சார்லி சாப்ளின் வாழ்க்கை கதையை என். சொக்கன் அவர்களின் எழுத்துக்களில் சமீபத்தில் படித்தேன். 

"எல்லா நகைச்சுவை நடிகரின் பின்ணணியிலும் சிலபல சோகங்கள் நிறைந்திருக்கும்."

இது சார்லி சாப்ளின் வாழ்க்கைக்கும் பொருந்தும். இவர் உலக மக்கள் அனைவரையும் தன் திறமையால் சிரிக்க வைத்தார். சார்லி சாப்ளின் வெறும் நகைச்சுவை நடிகர் என்று தான் எண்ணியிருந்தேன், ஆனால் அதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர், இன்னும் பல துறைகளில் சிறந்து விளங்கினார். சுருங்க சொல்ல வேண்டுமெனில் நம்ம ஊரில் டி. ராஜேந்தர் செய்த அனைத்தையும் அவர் அன்றே செய்தார், எனினும் சார்லி சாப்ளின் தான் இவர்களுக்கு முன்னோடி; இன்று டி. ராஜெந்தரின் சரக்கு தற்போதைய தலைமுறையினரின் முன் செல்லவில்லை, ஆனால் சார்லி சாப்ளின் வாழும் வரை அவர் எடுத்த படங்கள் அனைவரையும் கவர்ந்தது, ஏன் இன்றும் பலரை கவர்ந்து கொண்டிருக்கின்றது. (டி. ராஜேந்தரை சாப்ளினுடன் ஒப்பிட்டது ஒரு நல்ல ஒப்பீடு இல்லை என்பது உண்மை; என் அறிவுக்கு எட்டியது இதுதான்).

சார்லி சாப்ளினின் வளர்ச்சி அசாதாரணமானது, மிக குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்று நிரந்தரமாக நின்றவர் அவர். தன் கடும் உழைப்பு மற்றும் தொடர் முயற்சிகளால் சிகரங்களை தொட்டவர் சார்லி சாப்ளின், அவர் வாழ்க்கையின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை பலஉள. சினிமா ஊமையாக இருந்த போதே, தன் படங்களின் காட்சி அமைப்பின் மூலம் மக்களிடம் பேசியவர் சார்லி சாப்ளின். இத்தகைய மாபெரும் கலைஞனின் வாழ்வை நம் கண்ணெதிரே தோன்ற வைக்கிறார் என். சொக்கன். சில இடங்களில் ஒரு காலத்தில் இருந்து பல வருடங்கள் பயணப்பட்டு பின் நிகழ்காலத்தை விளக்கியிருக்கிறார், இது சில சமயம் புத்தகத்தின் தொடர்ச்சியை பாதித்தாலும், தேவையான ஒன்றாகவே அமைந்துள்ளது, இதனை என். சொக்கன் அவர்கள் சுட்டிக் காட்டவும் தவறவில்லை.

ஒரு படத்திற்கு தேவையான அத்தனை அம்சமும் நிறைந்தது இந்த புத்தகம். சோர்வு ஏற்படும் வேலையில் என். சொக்கன் சாப்ளினின் காதல் திருமண கதைகளை கச்சிதமாக இணைத்துள்ளார். மேலும், இத்தனை நாள் ஆண்கள் தான் காதல் தோல்வியால் அத்தனை அவஸ்தைகளையும் ஏற்கின்றனர் என்று பல சினிமா, கதை மற்றும் நிஜ வாழ்க்கையில் பார்த்திருக்கின்றோம், இது சார்லி சாப்ளின் கதையில் சற்றே மாறுபடுகிறது. அவர் மணக்காத முதல் காதலியும், அவரது நான்காவது மனைவியும் சார்லி சாப்ளினை பிரிந்த பிறகு சரக்கு அடித்து சமாதியாகினர் என்பது ஆச்சரியமூட்டும் உண்மை.

ஒரு கலைஞன் தன் படைப்புகளின் மூலம் சாகா வரம் பெருகின்றான். இறந்த பிறகும் பல தலைமுறைகள் அவனது படைப்புகளை ஆராய்கின்றது, இரசிக்கின்றது. அத்தகைய சாகா வரம் பெற்றவர் சார்லி சாப்ளின் என்றால் அது மிகையாகாது, ஏனெனில் இன்னும் பல தலைமுறைகள் தாண்டி, சிறியவர் முதல் பெரியவர் வரை இரசித்து பார்க்கும் நிலை சாப்ளின் படங்களுக்கு உண்டு. இது எல்லா கலைஞருக்கும் அமைவது இல்லை!

மிகவும் ஏழ்மையில் இருந்து உலகின் முக்கிய பணக்காரராக தன் உழைப்பு மற்றும் தன்மேல் கொண்ட நம்பிக்கையால் சிகரம் தொட்ட சார்லி சாப்ளினின் வாழ்வை நமக்கு எளிய நடையில் சுவாரஸ்யம் ததும்பும் எழுத்தில் கொடுத்த என். சொக்கன் அவர்களுக்கும், கிழக்கு பதிப்பகத்தாருக்கும் என் நன்றி!

 

Nalla pathippu

nalla pathippu.
looking forward for more.. :)


அறிமுகம் + விமர்சனத்துக்கு

அறிமுகம் + விமர்சனத்துக்கு நன்றி நண்பரே :)
- என். சொக்கன்,
பெங்களூரு.