மதிப்புரை
சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது வார விடுமுறைகளில் சனிக்கிழமைகளை விட ஞாயிறுகள் புத்துணர்வை ஏற்படுத்தும், ஏனெனில் அன்று தான் தொலைக்காட்சியின் முன் தவமிருக்க உகந்த நாள். இதற்கு பல காரணங்கள் இருப்பினும், காலையில் அரை மணி நேரம் டி. டி சேனலில் ஒளிபரப்பப்படும் சார்லி சாப்ளின் படங்கள் மிகவும் மகிழ்ச்சி தருபவை. இந்த அப்பாவி மனிதன் செய்யும் பல கோணங்கி சேஷ்டைகளைக் கண்டு, கண்ணில் நீர் வர சிரித்து மகிழ்ந்த நாட்களை மறக்க முடியாது. இந்த சார்லி சாப்ளின் வாழ்க்கை கதையை என். சொக்கன் அவர்களின் எழுத்துக்களில் சமீபத்தில் படித்தேன்.
"எல்லா நகைச்சுவை நடிகரின் பின்ணணியிலும் சிலபல சோகங்கள் நிறைந்திருக்கும்."
இது சார்லி சாப்ளின் வாழ்க்கைக்கும் பொருந்தும். இவர் உலக மக்கள் அனைவரையும் தன் திறமையால் சிரிக்க வைத்தார். சார்லி சாப்ளின் வெறும் நகைச்சுவை நடிகர் என்று தான் எண்ணியிருந்தேன், ஆனால் அதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர், இன்னும் பல துறைகளில் சிறந்து விளங்கினார். சுருங்க சொல்ல வேண்டுமெனில் நம்ம ஊரில் டி. ராஜேந்தர் செய்த அனைத்தையும் அவர் அன்றே செய்தார், எனினும் சார்லி சாப்ளின் தான் இவர்களுக்கு முன்னோடி; இன்று டி. ராஜெந்தரின் சரக்கு தற்போதைய தலைமுறையினரின் முன் செல்லவில்லை, ஆனால் சார்லி சாப்ளின் வாழும் வரை அவர் எடுத்த படங்கள் அனைவரையும் கவர்ந்தது, ஏன் இன்றும் பலரை கவர்ந்து கொண்டிருக்கின்றது. (டி. ராஜேந்தரை சாப்ளினுடன் ஒப்பிட்டது ஒரு நல்ல ஒப்பீடு இல்லை என்பது உண்மை; என் அறிவுக்கு எட்டியது இதுதான்).
சார்லி சாப்ளினின் வளர்ச்சி அசாதாரணமானது, மிக குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்று நிரந்தரமாக நின்றவர் அவர். தன் கடும் உழைப்பு மற்றும் தொடர் முயற்சிகளால் சிகரங்களை தொட்டவர் சார்லி சாப்ளின், அவர் வாழ்க்கையின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை பலஉள. சினிமா ஊமையாக இருந்த போதே, தன் படங்களின் காட்சி அமைப்பின் மூலம் மக்களிடம் பேசியவர் சார்லி சாப்ளின். இத்தகைய மாபெரும் கலைஞனின் வாழ்வை நம் கண்ணெதிரே தோன்ற வைக்கிறார் என். சொக்கன். சில இடங்களில் ஒரு காலத்தில் இருந்து பல வருடங்கள் பயணப்பட்டு பின் நிகழ்காலத்தை விளக்கியிருக்கிறார், இது சில சமயம் புத்தகத்தின் தொடர்ச்சியை பாதித்தாலும், தேவையான ஒன்றாகவே அமைந்துள்ளது, இதனை என். சொக்கன் அவர்கள் சுட்டிக் காட்டவும் தவறவில்லை.